search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திராவிடர் கழகம்"

    • தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது.
    • அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும்

    மதம், கடவுள்களை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வது குற்றம் என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு - இப்படிப் பிரச்சாரம் செய்தவர்களின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்புகள் வெளிவந்ததுண்டு; ஆனால், பிரதமர் மோடி, முஸ்லிம்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர்மீது நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும். எதிர்க்கட்சிகளும் நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் செல்ல முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

    அவ்வறிக்கையில், "இந்திய தேர்தல் சட்டப்படி, தேர்தல் பிரச்சாரத்தில் ஜாதி, மதம், கடவுள்களை முன்னிறுத்திடக் கூடாது. அப்படி மத, வகுப்பு உணர்வுகளை மய்யப்படுத்தி செய்யப்படும் தேர்தல் பிரச்சாரம் சட்டப்படி குற்றமாகும் (மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் சட்ட விதி 123(3) செக்ஷன்படி). அப்படி அவற்றைப் பயன்படுத்தி, தேர்தலில் வென்றாலும், அத்தேர்தல் சட்டப்படி செல்லாது என்பதை உச்சநீதிமன்றம் - பல தீர்ப்புகளில் உறுதி செய்துள்ளது.

    நாடாளுமன்றத்தின் 18 ஆவது பொதுத் தேர்தல் தொடங்கிய நிலை முதல் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் இராமன் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாதவர்கள் ஹிந்துவிரோதிகள் என்று, கடவுளையும், மதத்தையும் தேர்தலில் இழுத்துப் பேசுவது எவ்வகையில் நியாயம்?

    அதுமட்டுமா?

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றிக் குறிப்பிட்டு, அது முஸ்லிம் லீக் கருத்து கொண்டதாக உள்ளது என்று பேசுகிறார்!

    அண்மையில் ராஜஸ்தானில், ஹிந்து வாக்கு வங்கியை குறி வைத்து, ''காங்கிரஸ் கட்சி ஹிந்து சொத்துகளை முஸ்லிம்களுக்குப் பிரித்துக் கொடுக்கவே திட்டமிட்டுள்ளது'' என்றும், ''பொன் பொருளை அவர்களுக்கே பிரித்துக் கொடுப்பார்கள்'' என்று மனம் போன போக்கில் பேசி வருவது - நாளும் அவருக்கு வரும் செய்திகளின்படி, ''மக்கள் ஆதரவு குறைந்துவருகிறது; 400 தொகுதி என்கிற கனவு பகற்கனவாகி விடுவதோடு, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாத அளவுக்கு மக்கள் வெகுவாகப் புரிந்துகொண்டு விட்டார்கள்'' என்பதாலும், அவர் வகிக்கும் பிரதமர் பதவியின் மாண்பையும் கீழிறக்கத்திற்கு ஆளாக்கிவருவது, நாட்டிற்கே ஊறுவிளைவிக்கும் தேசிய அவமானம் ஆகும்!

    மோடி, அமித்ஷாவின் (ரெய்ப்பூர்) பேச்சு முழு சட்ட மீறல், தண்டனைக்குரிய குற்றமாகும்.

    பிரதமர் மோடியின் மற்றொரு விசித்திர விஷமப் பேச்சு (உ.பி. காசியாபாத்தில்) - ''எனக்கு முஸ்லிம் பெண்களின் ஆசிகள் ஏராளம் உண்டு'' என்று ஒரு குடும்பத்திற்குள்ளேயே, கணவன் - மனைவி இருவருக்கிடையே பிரிவினைவாதத்தைப் புகுத்தும் மிகக் கேவலமான கீழிறக்கப் பேச்சாகும். ஒரு பிரதமர் பதவியை - அதுவும் பத்தாண்டு காலம் அப்பதவியை வகித்தவர் இப்படிப் பேசுவது, அப்பதவியின் மாண்பையே குழிதோண்டிப் புதைப்பதல்லாமல் வேறு என்ன?

    தேர்தல் ஆணையம் இவற்றைக் கண்டும் காணாததாக, கேளாக் காதுகளுடனும் நடந்துகொள்வது ஜனநாயகத்திற்கும், அரசமைப்புச் சட்ட அவமதிப்புக்கும் சரியான ஆதாரங்களாகும்!

    அத்தனை எதிர்க்கட்சிகளும் குறிப்பாக காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி கட்சிகள் இதனை நாளும் தேர்தல் ஆணையத்திற்குச் சுட்டிக்காட்டியும், எந்த நடவடிக்கையையும் பிரதமர் பேச்சின்மீது இதுவரை எடுக்கவே இல்லை!

    ''சட்டத்தின்முன் அனைவரும் சமம்'' என்ற தத்துவம் ஏன் பிரதமர் பேச்சு விஷயத்தில் மட்டும் காணாமற்போக வேண்டும் - சட்டம் அனைவருக்கும் பொதுச் சட்டம்தானே!

    நாட்டில் மத வகுப்புக் கலவரங்களை வெடிக்கச் செய்யும் நிலையை ஆளும் பிரதமரே தூண்டுவதுபோல் பேசலாமா?

    எனவே, நிலைமை மேலும் மோசமாகமலிருக்க (காரணம் ஜூன் முதல் தேதிவரை ஏழு கட்டத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில்) ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட மாண்பு - அரசியல் விழுமியங்களைக் காக்கும் பெரும் பொறுப்பு - மக்களின் கடைசி நம்பிக்கையான உச்சநீதிமன்றத்திடம்தான் என்பதால், உடனடியாக முன்வந்து, பிரதமருக்குத் தாக்கீது அனுப்பி வழக்குப் பதிவு செய்யவேண்டும்.

    ''எதையும் பார்க்காமல் சட்டம், நீதி தனது கடமையைச் செய்தாகவேண்டும்'' என்பதை வலியுறுத்தத்தானே!

    எனவே, உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து ('Suo Moto') தன்னிச்சையாக வழக்கை எடுத்துக் கொள்வதே - நாட்டின் ஜனநாயகம் காக்க, விருப்பு வெறுப்பு அரசியல் என்ற அறத்தை விழுங்கும் அநியாய அலங்கோலம் தலைவிரித்தாடாமல் தடுக்கப்பட அதுவே ஒரே வழி!

    சட்டம் ஓரப்பார்வையோடு நடந்துகொண்டு வருகிறதே என்ற பழி நாளைய வரலாற்றுப் பழியாக மட்டுமல்லாமல், வரலாற்றுப் பிழையாகவும் ஆகிவிடக் கூடும்!

    இன்றைய எதேச்சதிகார மோடி ஆட்சியின் சட்ட இடிப்பாரை - உச்சநீதிமன்றம் போன்றவைதானே!

    மதச்சார்பற்ற நாடு என்று முத்திரை - ஆனால், தேர்தலில் ஜாதி, மத, வெறுப்புப் பிரச்சார அடைமழையாக, ''வேலியே பயிரை மேய்வது போன்று'' நாட்டின் பிரதமரே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் செய்து வரலாமா?

    அனைத்து எதிர்க்கட்சிகளும் இதனை உச்சநீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் எடுத்துச் சென்று, நீதி கேட்டு நெடிய பரப்புரைகளை அடைமழைபோல செய்ய முன்வரவேண்டும். இன்னும் 35 நாள்களும் நாட்டில் பிரச்சாரம் எவ்வளவு மோசமாகுமோ! அதற்குத் தடுப்பே இல்லையா? மவுனம் கலையட்டும் - சட்டம் கடமையைச் செய்யட்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க’’வேண்டுமாம். அது யாருடைய பொறுப்பு?
    • நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம். பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருந்தது?

    திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    "நாட்டின் 18 ஆவது பொதுத் தேர்தல் நேற்று (19-4-2024) தமிழ்நாடு முழுவதிலும் நடந்தது - பல மாநிலங்களிலும் முதல் கட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

    நேற்றைய வாக்குப் பதிவின்போது எந்த இடத்திலும் கலவரமோ அல்லது வாக்குச் சாவடிகளில் சண்டைகளோ நடைபெறாமல், பல கட்சித் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் சுமூகமாகத்தான் நடந்து முடிந்துள்ளது.

    மாலை 6 மணிக்குள் வாக்குப் போட வந்தவர்களுக்கு- பல வாக்குச்சாவடிகளில் 'டோக்கன்' கொடுத்து வரிசையில் அவர்களை நிற்க வைத்து அனைவரும் வாக்குப் போட்ட பிறகே, வாக்குப் பெட்டிக்குச் 'சீல்' வைக்கப்பட்ட செய்திகளும் வந்துள்ளன!

    தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் இன்று (20-4-2024) காலை புதுப்புது வாதங்களைக் கூறி, 'ஒப்பாரி' வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை!

    வெள்ளிக்கிழமை தேர்தல் வைக்காமல், புதன்கிழமை வைத்திருக்க''வேண்டுமாம். விடுமுறையில் மக்கள் ஊருக்குப் போய்விட்டார்களாம். அது யாருடைய பொறுப்பு?. நிறையப் பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளனவாம். பா.ஜ.க. என்ன செய்து கொண்டிருந்தது

    தி.மு.க.வினர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றினார்கள்' என்கிறார் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். அப்படி ஒரு புரளியை திடீரென்று இன்று (20-4-2024) காலை வந்து சொல்கிறார்களே, நேற்று (19-4-2024) ஏன் இதுகுறித்துப் பேசவில்லை? ஊடகங்கள் எங்கே போயினவாம்?

    சொல்லப்போனால், வாக்குச்சாவடியில் பிரச்சினை செய்ததாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உதவியாளர் உள்பட ஆதரவாளர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. நூறு சதவிகித வாக்குப் பதிவுக்குப் பல கோடி ரூபாய் விளம்பரம் செய்தும் பயனில்லை'' - பலன் இல்லையாம் (தமிழிசை).

    குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி. தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்? ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?

    அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது. ''ஆரம்பத்தில் 'அடானா' (மகிழ்ச்சி ராகம்), முடிவில் 'முகாரி' (துன்பப் பாட்டு).'' தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்?" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது.
    • 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பாக குலத்தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனாவா? என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேசியதாவது:-

    இந்த ஆட்சியில் ரூ.1200 கோடி செலவில் காலை சிற்றுண்டி தரப்படுகிறது. முந்தைய ஆட்சிகளில் கோவில்களில் புளியோதரை, தயிர் சாதம் தான் தரப்பட்டது. இப்பொழுது தான் குழந்தைகள் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள்.

    முன்பு சமஸ்கிருதம் படித்தால் மட்டுமே டாக்டர் என இருந்தது. அது ஒழிக்கப்பட்டது. ஆனால் தற்போது நீட் தேர்வினால் ஒடுக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவராக முடியவில்லை. புதிய கல்வி கொள்கையினால் 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் வைக்கப்படுகிறது. இவ்வளவு தேர்வு எழுதி மீண்டும் க்யூட் தேர்வில் பாஸ் ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. நீட் மற்றும் கியூட்டை மியூட் செய்வதற்குத்தான் நாங்கள் உள்ளோம்.

    சந்திராயன் ஆராய்ச்சியில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் குலதொழில் கல்வி திட்டம் ஒழிந்த பின் விஞ்ஞானி ஆகியவர்கள். தாய் வீட்டு சீதனம் போல மாதம் ஆயிரம் பணம் செலுத்தப்படுகிறது. பெண்களுக்கு அது உதவித்தொகை இல்லை. உரிமை தொகையாக வழங்கப்படுகிறது.

    மோடி ஆட்சியில் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெறுகிறது. 5 மாநில தேர்தலில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.வுக்கு இல்லை என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அனைவரும் ஒன்று சேர்ந்ததால் இந்தியாவை நாம் காப்பாற்றுகிறோம். அவர்கள் இந்தியா என்று கூறுவதற்கே பயப்படுகிறார்கள். இந்தியா என்கிற பெயர் அனைவரையும் இணைக்கிறது. இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். மோடி திரிசூலத்தை கையில் வைத்துள்ளார். ஒன்று வருமானவரித்துறை, மற்றொன்று சி.பி.ஐ., 3-வது அமலாக்கத்துறை. இது அனைத்தும் மக்கள் முன்பு எடுபடாது. உங்களிடம் அதானி, அம்பானி உள்ளார்கள். மக்கள் எங்களோடு உள்ளார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் தி.மு.க.,ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக திராவிடர் கழகம் குற்றம் சாட்டி வருகிறது
    • மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும் மாணவர் சேர்க்கைக்கும் தடை ஏற்படுத்தி கல்வி உரிமையை மத்திய அரசு பறித்துள்ளதாக திராவிடர் கழகம் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மத்திய அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

    நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். செயலாளர் வெற்றிவேந்தன் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் நல்லபெருமாள், மாநகர செயலாளர் ராஜசேகர், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ராஜேஷ், மகளிர் அணி தலைவர் இந்திரா மணி உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    • சனாதனத்தை பா.ஜ.க. தூக்கி பிடிக்கும் ரகசியம் என்ன? என்ற தலைப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகிறார்.

    சென்னை:

    திராவிடர் கழகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சனாதனத்தை பா.ஜனதா தூக்கி பிடிக்கும் ரகசியம் என்ன? என்ற தலைப்பில் இன்று மாலை 6.30 மணிக்கு பெரியார் திடலில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திராவிடர் கழக பொருளாளர் குமரேசன், துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன், வக்கீல்கள் அருள்மொழி, தளபதி பாண்டியன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும்.
    • வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நெல்லை மாவட்ட திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் மற்றும் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் வந்து அளித்த மனுவில்,

    நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் உள்ள பெரியார் ஸ்தூபியை புனரமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் பெரியார் மற்றும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    வண்ணார்பேட்டை கொக்கிரகுளம் இளங்கோவடிகள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் வந்து அளித்த மனுவில், இளங்கோவடிகள் தெருவில் அமைந்துள்ள வீடுகளுக்கு தெற்கு பக்கமாக கழிவு நீர் ஓடை செல்வதற்கு கிழக்கிலிருந்து வாறுகால் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டு அந்த சாக்கடை குறிச்சி சாலையில் உள்ள கழிவுநீர் ஓடையில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பகுதியை சிலர் ஆக்கிரமித்து விட்டதால் எங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை இல்லாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏற்படும் சூழல் உள்ளதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ×